Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, 16 March 2010

அம்மாவும் விடைபெறுதலும்!!

மு.கு: கடந்த வாரத்தில் ஒரு நாள், ஊரில் இருந்து வந்த ஒரு தோழியிடம்  அம்மாவிடம் இருந்து எனக்கு  இட்லி பொடி வாங்கி வர சொல்லியிருதேன். அவள் செல்லும் முன் அம்மாவுக்கு ஒரு கடிதம் தர எண்ணி இருதேன். அப்புறம் வேலை மும்முரத்தில் எழுத ஆரம்பித்து முடிக்க மறந்தேன். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாது. அனுப்பிய இட்லி பொடிக்குள்  ஒரு மளிகை கடை சிட்டை. பின் புறம் அம்மா கையெழுத்தில் ரெண்டு வரிகள். 

"செந்திமா, எனக்கு ஒரு லெட்டர் எழுதேன். என்ன வேணா எழுது. ஆனா கண்டிப்பாய் எழுது". அம்மாவின் எழுத்தை பார்த்து சிறிது உணர்ச்சிவசப்பட்டு வரைவில் நெடு நாளாக இருந்த இந்த இடுகையை முடித்தேன். அடுத்த வாரம் இது அம்மாவுக்கு என் கையெழுத்தில் போய் சேரும். :)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பனிரெண்டாம்  வகுப்பு முடித்து முதல் முறை வீட்டை விட்டு /ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று படிக்க பொட்டி படுகையுடன் கிளம்பினேன். (பேச்சுக்கு சொல்லல...உண்மையாவே பெரிய பொட்டி படுக்கையுடன்  தான்). தேடி தேடி எனக்கு என்ன வேண்டும் என்று யோசித்து என் தங்கை பொட்டி கட்டினாள். இத்தனைக்கும் நான் முதலில் தங்கியது  என் சித்தி வீட்டில் தான். அரை மனசுடன் அம்மா அப்பா கூட மதுரைக்கு பஸ் ஏறினேன். (தனியா போனா கல்லூரி கட்டணம் யார் கட்டுறது?). ஒரு பக்கம் என்னமோ நாம பெரிய ஆளு ஆயிட்டதா நினைப்பு. இன்னொரு பக்கம், பள்ளி முடித்து திரும்ப வந்த உடன் பலகாரம் எடுத்து வைக்க அம்மா இருக்க மாட்டங்களே? ஊரு கோபம் எல்லாம் காட்டுவதற்காக சும்மா தங்கையுடன் சண்ட போட முடியாதே.  என்ன தான் திட்டினாலும் ,அதிகாலை எழுப்பி விட்டு, ஹார்லிக்ஸ் குடுத்து, கிரிக்கெட் பாக்க சொல்லும் அப்பா? ஹ்ம்ம்..


பேருந்தில் அம்மா மடி படுத்து தூங்கினேன். "ஞாபகம் இருக்கா? காலேஜ் போற" என்ற அப்பாவை ஒரு முறை முறைத்து விட்டு அம்மா மடியில் நிம்மதியாய் தூங்கினேன். மனதுக்குள் ஆயிரத்தி எட்டு கேள்விகளுடன் சென்ற மறக்கவே முடியாத ரெண்டு மணி நேர பயணம் அது. 


அதன்பின் வார விடுமுறைக்கு நான் காரைக்குடி வரும் போது எல்லாம், திரும்பி போகும் போது அம்மா தான் என் கூட பேருந்து நிலையம்  வரை வருவார்கள்.இது ஒரு உணர்வு பூர்வமான நம்பிக்கை. ஒரு தடவை நான் அப்பாவோட போக, அந்த முறை பேருந்தில் அம்பது ருபாய் நோட்டு ஒன்றை நான் தொலைத்துவிட, "இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன்"னு   அம்மா, அப்பா கூட பெரிய சண்டை போட்டதாக தங்கை அடுத்த வாரம் சொன்னாள். 


எங்கள் வீட்டில் இருந்து ரெண்டு  கி.மீ நடக்க வேண்டும் பேருந்து ஏற. போற வழி ஒன்னும் பச்சை பசேல் விவசாய நிலம் இல்லை. தரிசு நிலம். எல்லாம் பிளாட் போட்டு பத்து வருசமா விக்காம கிடக்குற நிலம். ஒத்தை அடி பாதைல அம்மா கூட கதை அடிச்சுகிட்டே நடந்தா ரெண்டு கி.மீ நடந்ததே தெரியாது. என்ன தான் சனியும் ஞாயிறும் ஊர் கதை எல்லாம் பேசினாலும், அந்த கடைசி நாப்பது  நிமிட நடைல பேசின விஷயங்கள் பல நாட்களுக்கு  மறக்காது. சில நேரங்கள்ல அது அப்பாவையோ தங்கையையோ பற்றிய குறையாய் இருக்கும். சில நேரங்கள அது பக்கத்துக்கு வீட்டு சண்டை பத்தி இருக்கும். அம்மா டி.வில பார்த்த  சினிமா பத்தியோ, கோவில் திருவிழா பற்றியோ இருக்கும். என்ன பேசினோம் என்பதை விட, அந்த தருணங்களை  அம்மாவுடன் கழிப்பதே முக்கியமாய் இருந்தது.  'பேசினோம்' என்று நான் இடுகை முழுக்க சொன்னாலும், அம்மா பேச, நான் வெறும் "ம்" கொட்டிகிட்டே நடப்பேன். 


 "அப்பா திட்டினது எல்லாம் மனசுல வச்சுக்காத", "நல்லா சாப்புடு என்ன", "நல்லா படிக்கணும் தம்பி" , "அப்பாவ விட எனக்கு நீ தான் உசிரு", "அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படினு தப்பான பழக்கம் எல்லாம் பழக கூடாது" சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், அவை எதுவுமே வெறுப்பை தந்தது இல்லை. எதோ நான் விமானம் ஏற போற மாதிரி, பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் எனக்காக ஒரு பெரிய பிரார்த்தனை. . "அடுத்த வாரம் வருவீல?","பஸ்ல நிக்காம உக்கார்ந்து போ",ரூபா பத்திரம். இது போதும்ல? ". "இங்க பஸ் ஏறுனா சீட்டு கெடைக்காது. நீ பெரிய பஸ் ஸ்டான்ட் போய் பஸ் ஏறு. நாலு ரூபா போனா போகுது'..இது ரெண்டு ரூபா குடுக்காம சந்தைக்கு நடக்குற அம்மாவிடம் இருந்து.  






அதுக்கு அப்புறம் நான் வேலை கிடைத்து மங்களூர் போகும் போதும், அம்மா தான் எப்பவுமே பேருந்து நிலையம் வரை கூட வருவாங்க. ஒரு சில தடவ கூட்டமே இல்லாம பேருந்து வந்தாலும் நான் "அடுத்த பஸ்ல போறேன்" அப்படின்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நேரம் பேசுவோம். இப்பொழுது அம்மாவின் அறிவுரைகள் மாறி இருந்தன. "கெட்ட பழக்கங்களை" பற்றி தான் பெரும்பாலவை இருக்கும். இடை இடையே "பத்திரம் தம்பி","கடல் பக்கம் போகாத", "ஆபிஸ்ல சண்ட போடாத" "இவ்ளோ சம்பளம் குடுக்குறாங்களே, அதுக்கு ஏத்த வேல வாங்கு வாங்கலோ?" "சிக்கிரம் தூங்கிரு. என்ன?", "போன்  பண்ண மறந்துறாத"...இன்றும் எதுவுமே மறக்கவில்லை.


அமெரிக்க விமானம் ஏறிய நாள், அம்மா கண்களில் சொல்ல வந்த ஆனா சொல்ல முடியாத பல கவிதைகள்/கனவுகள்/வருத்தமான சந்தோசங்கள்/சந்தோஷமான வருத்தங்கள். அது ஒரு தனி கதை, இன்னொரு நாள் எழுதுறதா இருக்கேன்.


அம்மா சொன்னது மட்டும் ஆயிரம் கதைகள் இல்லை, அம்மா என்ற சொல்லுக்குள்ளும் ஆயிரம் கதைகள் இருகின்றன!!

Saturday, 31 October 2009

சஷ்டி 2009-ம் அம்மாவும்

எல்லாரும் தீபாவளி பத்தி பதிவு போட்டாங்க...சரி நாம வித்தியாசமா இருக்க வேண்டாமா? அதான் சஷ்டி பத்தி பதிவு..

உண்மைய சொல்லனும்னா தீபாவளி எல்லாம் இப்போ பெரிய உற்சாகத்த தரது இல்ல... அந்த பதினஞ்சு வயசு செந்தில் ஓடி ஓடி பட்டாசு வெடிச்சது, ஊரு குப்பை எல்லாம் எடுத்து எங்க வீட்டு வாசல்ல போட்டது, அம்மாவோட வடைக்காக அடுப்படில காத்துகிட்டு இருந்தது, எல்லாம் இப்போ இல்ல...ரெண்டு மூணு வருசமா புது டிரஸ் கூட எடுக்கல...சரி சஷ்டிக்கு வருவோம்...நான் இருக்க ஊருல (நான் இருக்கிறது அமெரிக்கா-ல ஒரு சின்ன ஊரு) ஒரு அழகான கோவில சஷ்டி கொண்டாட போறங்கனு கேள்வி பட்டேன்...

உடனே flashback.. 15 வருஷம் முன்னாடி போறோம்...எங்க? தேவகோட்டைக்கு...அதாங்க நம்ம சொந்த ஊரு...(ஊரு முழுக்க நமக்கே சொந்தமுனு நெனபோ ,  இல்ல ஊரு முழுக்க நமக்கு சொந்தகாரங்க இருக்குற நெனபோ, "சொந்த ஊரு"க்கு பெயர் காரணம் எல்லாம் கேட்க கூடாது)..1970-ல எல்லாம் கிருபானந்த வாரியார் சஷ்டிக்கு தேவகோட்டைக்கு வருவாராம்...அம்மா பெருமையா சொல்வாங்க...என்னோட சின்ன வயசுல அங்க பள்ளி குழந்தைகள் எல்லாம் சஷ்டி வாரத்துல முருகன் கோவில மேடைல எதாவது சமுக பிரச்சனை பற்றி பேசலாம்..எனக்காக அம்மா பெரிய ஆளுங்கள புடிச்சு பேச வாய்ப்பு வாங்குவாங்க....அந்த மழலை குரலில் நாங்க பேசுவதை, வாதாடுவதை கேட்கவே முருகன் வருவார் என்று மக்கள் நம்பினார்களோ? :-) அம்மா எழுதி கொடுப்பதை அப்படியே பேசி வருவேன்...அப்புறம் பஜனை..அம்மா மனமுருகி பாடும் முருகன் பாட்டுக்காகவே அவர் பக்கத்தில் உக்காருவேன்...அம்மாவுக்கு சங்கீதம் தெரியாது.. ராகமும் தாளமும் தெரியாது..ஆனா முருகன தெரியும்..பாடும் பாட்டின் அர்த்தம் தெரியும்...ரெம்ப பெருமையா இருக்கும்...அங்க பெரிய போட்டியே இருக்கும்...யாரு அடுத்த பாட்டு பாடுறதுன்னு..ஒரு பாட்டு முடிஞ்ச அடுத்த நொடில யாராவது அடுத்த பாட்டு பாட ஆரம்பிச்சுருவாங்க... "சேர்ந்து பாடுடா" அம்மா சொன்ன போது எல்லாம் கேட்டது இல்ல... அவங்க எல்லாம் பாடுறத பிரமிச்சு போய் கேட்டுகிட்டே இருந்துருகேன்...அவங்க பாடல்களே என்னை முருகனிடம் அழைத்து சென்றதால் நான் பாடவில்லை என்று நினைக்கறேன்...மறக்க முடியாத நாட்கள்...

சரி, 2009-க்கு வாங்க..சஷ்டி முதல் நாள்...ஞாயிறு மாலை..கோவிலுக்கு போனேன்...ஒரே ஒரு தமிழ் குடும்பம் மட்டும் வந்திருதாங்க..கந்த சஷ்டி கவசம் பாட ஆரம்பிச்சோம்...ரெண்டாவது பாராவுல நான் அழுக ஆரம்பிச்சுட்டேன்...இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு...ரொம்ப தடவ அம்மாவ மிஸ் பண்ணிருக்கேன்..ஆனா இன்னைக்கு வர அழுதது இல்ல..அம்மாவுக்கு நா அழுதா பிடிக்காது.. எப்போவுமே ஒரு அழைப்பில் அம்மா இருக்கிறார் என்ற எண்ணமே என்னை அடுத்த நொடிக்கு இழுத்து சென்று கொண்டிருந்தது. ஆனால் சஷ்டி என்னை அழ வைத்து விட்டது.. இதுவரை முருகனை அம்மா மூலமாக தான் பார்த்து இருக்கிறேன்... இன்று அம்மா மைல்களுக்கு அப்பால்..நான் தனியாய்...சஷ்டி படிக்க முடியவில்லை... ஒரு விஷயம் சின்னதாக இருந்தாலும் சில நேரங்களில் நம்மை முழுதாக ஆட்கொண்டு விடுவது மிகவும் ஆச்சிரியம் தான்..வீடு திரும்பும் போது அடுத்த நாள் கோவிலுக்கு போவதில்லை என்று முடிவு எடுத்தேன்...ஆனால் அன்று இரவு அதிசியமாய் ஆழ்ந்து தூங்கினேன், அம்மா மடியில் தூங்கியது போல. அடுத்த நாள் முழுக்க காரணமே இல்லாமல் சந்தோசமாக இருந்தேன். என் கார் என்னை கேட்காமலே கோவிலுக்கு இழுத்து சென்றது..மிக மிக சந்தோசமாய் சஷ்டி பாடினேன்...அம்மா என் கூட பாடுற மாதிரி இருந்தது. என்னை நம்புங்கள்!!. அம்மா என்னோடு பாடினாங்க.பாடி முடித்து கண் திறந்த பொழுது முருகன் தெரியவில்லை...அம்மா தெரிந்தார்...பின் ஏழு நாட்களும் கோவில் சென்றேன். திருமணம் ஆகாத ஒரு விளையாட்டு வயது பிள்ளை, பொறுப்பாக எல்லா நாளும் கோவிலுக்கு வந்தது பலர் புருவத்தை உயர்த்தியது..அவர்களுக்கு தெரியாது, நான் என் அம்மாவை பார்க்க வந்தேன் என்று...நான் மட்டுமே திருமணம் ஆகாதவன் என்பதால் மீதம் இருந்த பிரசாதம் எனக்காக தினமும் பொட்டலம் கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் சஷ்டி பாடிய பொழுது என் சந்தோசம் பல மடங்கு ஆனது.அன்று அம்மா பாட கெஞ்சிய போது நான் பாடவில்லை...அன்று அம்மா மூலம் முருகன் தெரிந்தான்...இன்று முருகன் மூலம்  அம்மா தெரிந்தார். கோவிலில் பல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். சூர சம்காரமும், முருகன் திரு கல்யாணமும் என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்றது.

இன்று வரை அம்மாவிடம் நான் சஷ்டிக்கு போனது பற்றி சொல்லவில்லை..சொன்னால் ரெம்ப சந்தோஷ படுவாங்க..ஆனால் நான் சொல்லும்போது அழுது விடுவேன்...அப்பறம் அம்மா சங்கடப்படுவங்க. வேண்டாம் சில அழுகைகள் நம்முடன் மட்டுமே இருப்பது நல்லது...ஆனா ஒன்னு நிச்சியம்...அடுத்த தடவ அம்மா முருகன் பாட்டு பாடுறப்போ நான் அவங்க கூட பாடிகிட்டு இருப்பேன்..

டிஸ்கி: முதல் நாள் சஷ்டி வந்த தமிழ் குடும்பத்தில் ஒரு சிறுவன் ரெம்ப துருதுரு-னு இருந்தான்...அழகாக மயில் வரைந்தான். கடைசி நாளில் அவன் செய்து கொண்டு வந்த சூரனை பார்த்த பொழுது பொறாமையை இருந்தது, அவன் கலை ஆர்வத்தை பார்த்து. அதே போல் திருகல்யாணத்தன்று பரதம் ஆடிய சிறுமிகளை பார்த்த பொழுதும் மிகவும் வெட்கப்பட்டேன். சிறு வயதில் அம்மா கற்று குடுக்க நினைத்த எதையும் கற்காமல் விளையாட்டு பிள்ளையாகவே இருந்து விட்டோமே என்று..கிழே இருப்பது எங்க ஊர் சூரன்... :-)