எல்லாரும் தீபாவளி பத்தி பதிவு போட்டாங்க...சரி நாம வித்தியாசமா இருக்க வேண்டாமா? அதான் சஷ்டி பத்தி பதிவு..
உண்மைய சொல்லனும்னா தீபாவளி எல்லாம் இப்போ பெரிய உற்சாகத்த தரது இல்ல... அந்த பதினஞ்சு வயசு செந்தில் ஓடி ஓடி பட்டாசு வெடிச்சது, ஊரு குப்பை எல்லாம் எடுத்து எங்க வீட்டு வாசல்ல போட்டது, அம்மாவோட வடைக்காக அடுப்படில காத்துகிட்டு இருந்தது, எல்லாம் இப்போ இல்ல...ரெண்டு மூணு வருசமா புது டிரஸ் கூட எடுக்கல...சரி சஷ்டிக்கு வருவோம்...நான் இருக்க ஊருல (நான் இருக்கிறது அமெரிக்கா-ல ஒரு சின்ன ஊரு) ஒரு அழகான கோவில சஷ்டி கொண்டாட போறங்கனு கேள்வி பட்டேன்...
உடனே flashback.. 15 வருஷம் முன்னாடி போறோம்...எங்க? தேவகோட்டைக்கு...அதாங்க நம்ம சொந்த ஊரு...(ஊரு முழுக்க நமக்கே சொந்தமுனு நெனபோ , இல்ல ஊரு முழுக்க நமக்கு சொந்தகாரங்க இருக்குற நெனபோ, "சொந்த ஊரு"க்கு பெயர் காரணம் எல்லாம் கேட்க கூடாது)..1970-ல எல்லாம் கிருபானந்த வாரியார் சஷ்டிக்கு தேவகோட்டைக்கு வருவாராம்...அம்மா பெருமையா சொல்வாங்க...என்னோட சின்ன வயசுல அங்க பள்ளி குழந்தைகள் எல்லாம் சஷ்டி வாரத்துல முருகன் கோவில மேடைல எதாவது சமுக பிரச்சனை பற்றி பேசலாம்..எனக்காக அம்மா பெரிய ஆளுங்கள புடிச்சு பேச வாய்ப்பு வாங்குவாங்க....அந்த மழலை குரலில் நாங்க பேசுவதை, வாதாடுவதை கேட்கவே முருகன் வருவார் என்று மக்கள் நம்பினார்களோ? :-) அம்மா எழுதி கொடுப்பதை அப்படியே பேசி வருவேன்...அப்புறம் பஜனை..அம்மா மனமுருகி பாடும் முருகன் பாட்டுக்காகவே அவர் பக்கத்தில் உக்காருவேன்...அம்மாவுக்கு சங்கீதம் தெரியாது.. ராகமும் தாளமும் தெரியாது..ஆனா முருகன தெரியும்..பாடும் பாட்டின் அர்த்தம் தெரியும்...ரெம்ப பெருமையா இருக்கும்...அங்க பெரிய போட்டியே இருக்கும்...யாரு அடுத்த பாட்டு பாடுறதுன்னு..ஒரு பாட்டு முடிஞ்ச அடுத்த நொடில யாராவது அடுத்த பாட்டு பாட ஆரம்பிச்சுருவாங்க... "சேர்ந்து பாடுடா" அம்மா சொன்ன போது எல்லாம் கேட்டது இல்ல... அவங்க எல்லாம் பாடுறத பிரமிச்சு போய் கேட்டுகிட்டே இருந்துருகேன்...அவங்க பாடல்களே என்னை முருகனிடம் அழைத்து சென்றதால் நான் பாடவில்லை என்று நினைக்கறேன்...மறக்க முடியாத நாட்கள்...
சரி, 2009-க்கு வாங்க..சஷ்டி முதல் நாள்...ஞாயிறு மாலை..கோவிலுக்கு போனேன்...ஒரே ஒரு தமிழ் குடும்பம் மட்டும் வந்திருதாங்க..கந்த சஷ்டி கவசம் பாட ஆரம்பிச்சோம்...ரெண்டாவது பாராவுல நான் அழுக ஆரம்பிச்சுட்டேன்...இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு...ரொம்ப தடவ அம்மாவ மிஸ் பண்ணிருக்கேன்..ஆனா இன்னைக்கு வர அழுதது இல்ல..அம்மாவுக்கு நா அழுதா பிடிக்காது.. எப்போவுமே ஒரு அழைப்பில் அம்மா இருக்கிறார் என்ற எண்ணமே என்னை அடுத்த நொடிக்கு இழுத்து சென்று கொண்டிருந்தது. ஆனால் சஷ்டி என்னை அழ வைத்து விட்டது.. இதுவரை முருகனை அம்மா மூலமாக தான் பார்த்து இருக்கிறேன்... இன்று அம்மா மைல்களுக்கு அப்பால்..நான் தனியாய்...சஷ்டி படிக்க முடியவில்லை... ஒரு விஷயம் சின்னதாக இருந்தாலும் சில நேரங்களில் நம்மை முழுதாக ஆட்கொண்டு விடுவது மிகவும் ஆச்சிரியம் தான்..வீடு திரும்பும் போது அடுத்த நாள் கோவிலுக்கு போவதில்லை என்று முடிவு எடுத்தேன்...ஆனால் அன்று இரவு அதிசியமாய் ஆழ்ந்து தூங்கினேன், அம்மா மடியில் தூங்கியது போல. அடுத்த நாள் முழுக்க காரணமே இல்லாமல் சந்தோசமாக இருந்தேன். என் கார் என்னை கேட்காமலே கோவிலுக்கு இழுத்து சென்றது..மிக மிக சந்தோசமாய் சஷ்டி பாடினேன்...அம்மா என் கூட பாடுற மாதிரி இருந்தது. என்னை நம்புங்கள்!!. அம்மா என்னோடு பாடினாங்க.பாடி முடித்து கண் திறந்த பொழுது முருகன் தெரியவில்லை...அம்மா தெரிந்தார்...பின் ஏழு நாட்களும் கோவில் சென்றேன். திருமணம் ஆகாத ஒரு விளையாட்டு வயது பிள்ளை, பொறுப்பாக எல்லா நாளும் கோவிலுக்கு வந்தது பலர் புருவத்தை உயர்த்தியது..அவர்களுக்கு தெரியாது, நான் என் அம்மாவை பார்க்க வந்தேன் என்று...நான் மட்டுமே திருமணம் ஆகாதவன் என்பதால் மீதம் இருந்த பிரசாதம் எனக்காக தினமும் பொட்டலம் கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் சஷ்டி பாடிய பொழுது என் சந்தோசம் பல மடங்கு ஆனது.அன்று அம்மா பாட கெஞ்சிய போது நான் பாடவில்லை...அன்று அம்மா மூலம் முருகன் தெரிந்தான்...இன்று முருகன் மூலம் அம்மா தெரிந்தார். கோவிலில் பல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். சூர சம்காரமும், முருகன் திரு கல்யாணமும் என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்றது.
இன்று வரை அம்மாவிடம் நான் சஷ்டிக்கு போனது பற்றி சொல்லவில்லை..சொன்னால் ரெம்ப சந்தோஷ படுவாங்க..ஆனால் நான் சொல்லும்போது அழுது விடுவேன்...அப்பறம் அம்மா சங்கடப்படுவங்க. வேண்டாம் சில அழுகைகள் நம்முடன் மட்டுமே இருப்பது நல்லது...ஆனா ஒன்னு நிச்சியம்...அடுத்த தடவ அம்மா முருகன் பாட்டு பாடுறப்போ நான் அவங்க கூட பாடிகிட்டு இருப்பேன்..
டிஸ்கி: முதல் நாள் சஷ்டி வந்த தமிழ் குடும்பத்தில் ஒரு சிறுவன் ரெம்ப துருதுரு-னு இருந்தான்...அழகாக மயில் வரைந்தான். கடைசி நாளில் அவன் செய்து கொண்டு வந்த சூரனை பார்த்த பொழுது பொறாமையை இருந்தது, அவன் கலை ஆர்வத்தை பார்த்து. அதே போல் திருகல்யாணத்தன்று பரதம் ஆடிய சிறுமிகளை பார்த்த பொழுதும் மிகவும் வெட்கப்பட்டேன். சிறு வயதில் அம்மா கற்று குடுக்க நினைத்த எதையும் கற்காமல் விளையாட்டு பிள்ளையாகவே இருந்து விட்டோமே என்று..கிழே இருப்பது எங்க ஊர் சூரன்... :-)