Sunday, 28 March 2010

"சென்னை இணைய எழுத்தாளர்?" சந்திப்பு!!

என்னடா இவன் தான் சென்னைல இல்லையே..ஆனா இதபத்தி பதிவு போடறான்னு நீங்க முனுமுனுக்குறது நல்லாவே கேக்குது. ஆனா பாருங்க, நமக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபாடு ஜாஸ்தி. அதான் நம்ம கருத்த பதிஞ்சுருவோம்னு..டோண்டு பதிவுல என்ன விவாதிக்கபட்டதுன்னு தெளிவா சொல்லி இருக்கார். சிவராமன் பதிவையும் படிங்க. 


சென்னை இணைய எழுத்தாளர்கள் சங்கம், இல்ல குழுமம், இல்ல சமுதாயம், அட பேரு வைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல. லக்கி  சொன்ன மாதிரி, என்னை எல்லாம் எழுத்தாளர்னு யாராவது கூப்பிட்டா, அப்புறம் தமிழ்ல இன்னொரு புது வார்த்தை கண்டுபிடிக்கணும், உண்மையான எழுத்தாளர்களை அழைக்க. :-) நமக்கு தமிழ் அகராதில சேர்க்க பல அறிவியல் சொற்கள் இருப்பதால, இந்த வேலை நமக்கு வேண்டாமே. 


பேர பத்தி நா பேசுறதே தப்பு. ஏன்னா, நான் இப்படி ஒரு சங்கம் வேணுமான்னு கேக்குற குழுவை சேர்ந்தவன். சரி ஒரு நிமிஷம் வேணும்னு வச்சுக்குவோம்...நன்மைகள்/தீமைகள் என்ன?


ஒரு குழுவிற்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு. தனி மனிதர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்கள் குழுக்களால் சாதிக்கப்பட்டு இருக்கு. ஆனால் அந்த குழுக்களுக்கு எல்லாம் ஒரு பொது நோக்கம், பொது பிரச்சனை இருந்தன. ஒரு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இலங்கை தமிழர்கள் சுதந்திரமாய் சுவாசிக்க வேண்டும் என்பது வரை. நம் குழுவில் அப்படி என்ன பிரச்சனை இருக்கு? (பல வகைகளில் வேறுபடும் நம் எல்லாரையும் ஒன்றாய் கட்டி போடும் அளவு?)



          அ. டோண்டு/சுகுணா திவாகர் சந்தித்த மாதிரி போலிகள் தொல்லை. 
                            இது பெரிய பிரச்சனை தான். ஆனால் இதில் உதவ சைபர் கிரைம் காவலர்கள் தான் ரெம்ப முக்கியம் என்பது என் எண்ணம். ஒரு தனி மனிதனின் கோரிக்கைக்கும் ஒரு சங்கத்தின் கோரிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை. 
          ஆ. பயிற்சிகள்/போட்டிகள்/தொழில்நுட்ப உதவிகள்:
                       ஒரு சங்கம் இவற்றை எடுத்து நடத்தும் போது, வரவேற்ப்பு பெரிதாக இருக்கும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகளும், அதனால் நமக்குள்  பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும். ஒரு கவிதை போட்டியில் என் ஆதர்ஷ எழுத்தாளர் நடுவர் ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து, "கவிதை போட்டியின் பரிசு சிறுகதை போட்டியின் பரிசை விட அதிகம்", "பரிசு கவிதைகள் எல்லாம் பின்நவினத்துவ கவிதைகள்" என்பது வரை பல குற்றசாட்டுகள் வரும். தனியாய் இவற்றை நடத்தும் போது, அது அவர்கள் பணம், அவர்கள் எது செய்தாலும் கேட்க நமக்கு உரிமை இல்லை. ஆனால் சங்கம் பொது. நேற்று அமைப்பில் சேர்ந்து, இன்னும் நம் நோக்கங்களை புரிந்து கொள்ளாத ஒருவர், உறுப்பினர் என்ற உரிமையில் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேள்வி கேட்க முடியும்.
       இ. சங்க நிர்வாகம்:
               பணமும், பதவியும் தான் மனிதர்களை பொறாமை கொள்ள செய்யும் செயலில் முன்னிலை பெறுபவை. பதிவர்களும் மனிதர்கள் தானே? சங்க தேர்தல்கள், செலவினங்கள் பல கேள்விகளை எழுப்பும். சங்க நிகழ்ச்சிகளுக்கு ஓடியாடி வேலை செய்பவர்கள், தங்களுக்கு பிடித்த வகையில் அந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தால் கூட பலர் அதனை கேலி/கேள்வி செய்வார்கள். "ஒரு சல்லி காசு வாங்காம, நான் ஏன் இத்தனை வேலை செய்ய வேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர்கள் என்னும் பொழுது,  பதவி ஆசை பிடித்த குழு நிர்வாக பொறுபேற்கும். அப்புறம் விழுப்புரம் தான்... :-)
     ஈ. பதிவுலகம் இன்னும் சில வருடங்களில் லட்சம் பேர் வாழும் வலை இடம் ஆக போகிறது. இத்தனை பேரை நாம் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வர போகிறோம். ஒரு சின்ன ஹாலில்  நடந்த கூட்டத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள்.  இந்த முயற்சி தமிழர்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது போல. திமுகவும் அதிமுகவும் மதிமுகவும் ஒரு தலைவரை ஏற்று கொள்வது போல. 
உ.  பலர் தாங்கள்  சென்னையில் இல்லை, ஆனால் அவர்கள் பணத்தில் பயிலரங்கு நடக்கிறது மாதிரியான பல வினாக்கள் வரும். 


நான் எதோ இது நடக்கவே முடியாத விஷயம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். "நானும் ரவுடி" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமை தான். என் கருத்துகள் இதோ:


            மின்னச்சல் குழுமமாக நாம் இருக்கலாம். எல்லாரிடமும் பணம் கேட்காமல், தருபவர் தரட்டும் என்ற கொள்கையுடன், வரும் பணத்தில் நம்மின் மிக அத்தியாவசிய தேவையான, அனானிகளை களைவது மாதிரியான செயல்களை மட்டும் செய்வோம். (ஓர் அளவுக்கு மேல் பணம் வந்தால், அதை மறுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்). போட்டிகளோ, பயிற்சிகளோ இதன் மூலம் வேண்டாம். உதவிகள் சங்கம் மூலம் வேண்டாம். சங்க மின்னச்சல் மூலம் உதவி கோரலாம். ஆனால் உதவில் தனிப்பட்ட முறையிலயே செய்யப்பட வேண்டும். நம்முடைய நோக்கங்களை மிகவும் குறைவாக வைத்து கொள்வதினால், நிறைய பேரை குழுமத்தில் இணைக்க முடியும். பதிவர் அல்லாத வாசகர்களை கூட இதில் இணைய வாய்ப்புண்டு  நிர்வாகிகள் என்று ஒரு குழு தேவை இல்லை. பதவி இல்லை. பணம் இல்லை. போட்டியோ பொறமையோ இருக்காது. நாம் எல்லாரும் ஒரு குழுவில் பதிவு செய்து இருப்போம், ஆனால் அந்த குழு நமக்கு மிகவும் அத்தியாவசிய உதவிகளை மட்டுமே செய்யும். பிடிக்காதவர்கள் கூட "ஊரோடு ஒத்து வாழ" குழுவில்  சேருவார்கள். 


எல்லாமே என் கருத்துக்கள். நான் பதிவு எழுதவதே அபூர்வம். எனவே எனக்கு இதை பற்றி பேச எவ்வுளவு தகுதி இருக்குனு தெரியாது. புடிச்சா எடுத்துக்கோங்க, இல்லாட்டி யாருக்கும் நஷ்டம் இல்ல. 


Very less we try to accomplish, more people will agree to it!! 

Tuesday, 16 March 2010

அம்மாவும் விடைபெறுதலும்!!

மு.கு: கடந்த வாரத்தில் ஒரு நாள், ஊரில் இருந்து வந்த ஒரு தோழியிடம்  அம்மாவிடம் இருந்து எனக்கு  இட்லி பொடி வாங்கி வர சொல்லியிருதேன். அவள் செல்லும் முன் அம்மாவுக்கு ஒரு கடிதம் தர எண்ணி இருதேன். அப்புறம் வேலை மும்முரத்தில் எழுத ஆரம்பித்து முடிக்க மறந்தேன். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாது. அனுப்பிய இட்லி பொடிக்குள்  ஒரு மளிகை கடை சிட்டை. பின் புறம் அம்மா கையெழுத்தில் ரெண்டு வரிகள். 

"செந்திமா, எனக்கு ஒரு லெட்டர் எழுதேன். என்ன வேணா எழுது. ஆனா கண்டிப்பாய் எழுது". அம்மாவின் எழுத்தை பார்த்து சிறிது உணர்ச்சிவசப்பட்டு வரைவில் நெடு நாளாக இருந்த இந்த இடுகையை முடித்தேன். அடுத்த வாரம் இது அம்மாவுக்கு என் கையெழுத்தில் போய் சேரும். :)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பனிரெண்டாம்  வகுப்பு முடித்து முதல் முறை வீட்டை விட்டு /ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று படிக்க பொட்டி படுகையுடன் கிளம்பினேன். (பேச்சுக்கு சொல்லல...உண்மையாவே பெரிய பொட்டி படுக்கையுடன்  தான்). தேடி தேடி எனக்கு என்ன வேண்டும் என்று யோசித்து என் தங்கை பொட்டி கட்டினாள். இத்தனைக்கும் நான் முதலில் தங்கியது  என் சித்தி வீட்டில் தான். அரை மனசுடன் அம்மா அப்பா கூட மதுரைக்கு பஸ் ஏறினேன். (தனியா போனா கல்லூரி கட்டணம் யார் கட்டுறது?). ஒரு பக்கம் என்னமோ நாம பெரிய ஆளு ஆயிட்டதா நினைப்பு. இன்னொரு பக்கம், பள்ளி முடித்து திரும்ப வந்த உடன் பலகாரம் எடுத்து வைக்க அம்மா இருக்க மாட்டங்களே? ஊரு கோபம் எல்லாம் காட்டுவதற்காக சும்மா தங்கையுடன் சண்ட போட முடியாதே.  என்ன தான் திட்டினாலும் ,அதிகாலை எழுப்பி விட்டு, ஹார்லிக்ஸ் குடுத்து, கிரிக்கெட் பாக்க சொல்லும் அப்பா? ஹ்ம்ம்..


பேருந்தில் அம்மா மடி படுத்து தூங்கினேன். "ஞாபகம் இருக்கா? காலேஜ் போற" என்ற அப்பாவை ஒரு முறை முறைத்து விட்டு அம்மா மடியில் நிம்மதியாய் தூங்கினேன். மனதுக்குள் ஆயிரத்தி எட்டு கேள்விகளுடன் சென்ற மறக்கவே முடியாத ரெண்டு மணி நேர பயணம் அது. 


அதன்பின் வார விடுமுறைக்கு நான் காரைக்குடி வரும் போது எல்லாம், திரும்பி போகும் போது அம்மா தான் என் கூட பேருந்து நிலையம்  வரை வருவார்கள்.இது ஒரு உணர்வு பூர்வமான நம்பிக்கை. ஒரு தடவை நான் அப்பாவோட போக, அந்த முறை பேருந்தில் அம்பது ருபாய் நோட்டு ஒன்றை நான் தொலைத்துவிட, "இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன்"னு   அம்மா, அப்பா கூட பெரிய சண்டை போட்டதாக தங்கை அடுத்த வாரம் சொன்னாள். 


எங்கள் வீட்டில் இருந்து ரெண்டு  கி.மீ நடக்க வேண்டும் பேருந்து ஏற. போற வழி ஒன்னும் பச்சை பசேல் விவசாய நிலம் இல்லை. தரிசு நிலம். எல்லாம் பிளாட் போட்டு பத்து வருசமா விக்காம கிடக்குற நிலம். ஒத்தை அடி பாதைல அம்மா கூட கதை அடிச்சுகிட்டே நடந்தா ரெண்டு கி.மீ நடந்ததே தெரியாது. என்ன தான் சனியும் ஞாயிறும் ஊர் கதை எல்லாம் பேசினாலும், அந்த கடைசி நாப்பது  நிமிட நடைல பேசின விஷயங்கள் பல நாட்களுக்கு  மறக்காது. சில நேரங்கள்ல அது அப்பாவையோ தங்கையையோ பற்றிய குறையாய் இருக்கும். சில நேரங்கள அது பக்கத்துக்கு வீட்டு சண்டை பத்தி இருக்கும். அம்மா டி.வில பார்த்த  சினிமா பத்தியோ, கோவில் திருவிழா பற்றியோ இருக்கும். என்ன பேசினோம் என்பதை விட, அந்த தருணங்களை  அம்மாவுடன் கழிப்பதே முக்கியமாய் இருந்தது.  'பேசினோம்' என்று நான் இடுகை முழுக்க சொன்னாலும், அம்மா பேச, நான் வெறும் "ம்" கொட்டிகிட்டே நடப்பேன். 


 "அப்பா திட்டினது எல்லாம் மனசுல வச்சுக்காத", "நல்லா சாப்புடு என்ன", "நல்லா படிக்கணும் தம்பி" , "அப்பாவ விட எனக்கு நீ தான் உசிரு", "அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படினு தப்பான பழக்கம் எல்லாம் பழக கூடாது" சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், அவை எதுவுமே வெறுப்பை தந்தது இல்லை. எதோ நான் விமானம் ஏற போற மாதிரி, பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் எனக்காக ஒரு பெரிய பிரார்த்தனை. . "அடுத்த வாரம் வருவீல?","பஸ்ல நிக்காம உக்கார்ந்து போ",ரூபா பத்திரம். இது போதும்ல? ". "இங்க பஸ் ஏறுனா சீட்டு கெடைக்காது. நீ பெரிய பஸ் ஸ்டான்ட் போய் பஸ் ஏறு. நாலு ரூபா போனா போகுது'..இது ரெண்டு ரூபா குடுக்காம சந்தைக்கு நடக்குற அம்மாவிடம் இருந்து.  






அதுக்கு அப்புறம் நான் வேலை கிடைத்து மங்களூர் போகும் போதும், அம்மா தான் எப்பவுமே பேருந்து நிலையம் வரை கூட வருவாங்க. ஒரு சில தடவ கூட்டமே இல்லாம பேருந்து வந்தாலும் நான் "அடுத்த பஸ்ல போறேன்" அப்படின்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நேரம் பேசுவோம். இப்பொழுது அம்மாவின் அறிவுரைகள் மாறி இருந்தன. "கெட்ட பழக்கங்களை" பற்றி தான் பெரும்பாலவை இருக்கும். இடை இடையே "பத்திரம் தம்பி","கடல் பக்கம் போகாத", "ஆபிஸ்ல சண்ட போடாத" "இவ்ளோ சம்பளம் குடுக்குறாங்களே, அதுக்கு ஏத்த வேல வாங்கு வாங்கலோ?" "சிக்கிரம் தூங்கிரு. என்ன?", "போன்  பண்ண மறந்துறாத"...இன்றும் எதுவுமே மறக்கவில்லை.


அமெரிக்க விமானம் ஏறிய நாள், அம்மா கண்களில் சொல்ல வந்த ஆனா சொல்ல முடியாத பல கவிதைகள்/கனவுகள்/வருத்தமான சந்தோசங்கள்/சந்தோஷமான வருத்தங்கள். அது ஒரு தனி கதை, இன்னொரு நாள் எழுதுறதா இருக்கேன்.


அம்மா சொன்னது மட்டும் ஆயிரம் கதைகள் இல்லை, அம்மா என்ற சொல்லுக்குள்ளும் ஆயிரம் கதைகள் இருகின்றன!!