Tuesday, 16 March, 2010

அம்மாவும் விடைபெறுதலும்!!

மு.கு: கடந்த வாரத்தில் ஒரு நாள், ஊரில் இருந்து வந்த ஒரு தோழியிடம்  அம்மாவிடம் இருந்து எனக்கு  இட்லி பொடி வாங்கி வர சொல்லியிருதேன். அவள் செல்லும் முன் அம்மாவுக்கு ஒரு கடிதம் தர எண்ணி இருதேன். அப்புறம் வேலை மும்முரத்தில் எழுத ஆரம்பித்து முடிக்க மறந்தேன். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாது. அனுப்பிய இட்லி பொடிக்குள்  ஒரு மளிகை கடை சிட்டை. பின் புறம் அம்மா கையெழுத்தில் ரெண்டு வரிகள். 

"செந்திமா, எனக்கு ஒரு லெட்டர் எழுதேன். என்ன வேணா எழுது. ஆனா கண்டிப்பாய் எழுது". அம்மாவின் எழுத்தை பார்த்து சிறிது உணர்ச்சிவசப்பட்டு வரைவில் நெடு நாளாக இருந்த இந்த இடுகையை முடித்தேன். அடுத்த வாரம் இது அம்மாவுக்கு என் கையெழுத்தில் போய் சேரும். :)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பனிரெண்டாம்  வகுப்பு முடித்து முதல் முறை வீட்டை விட்டு /ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று படிக்க பொட்டி படுகையுடன் கிளம்பினேன். (பேச்சுக்கு சொல்லல...உண்மையாவே பெரிய பொட்டி படுக்கையுடன்  தான்). தேடி தேடி எனக்கு என்ன வேண்டும் என்று யோசித்து என் தங்கை பொட்டி கட்டினாள். இத்தனைக்கும் நான் முதலில் தங்கியது  என் சித்தி வீட்டில் தான். அரை மனசுடன் அம்மா அப்பா கூட மதுரைக்கு பஸ் ஏறினேன். (தனியா போனா கல்லூரி கட்டணம் யார் கட்டுறது?). ஒரு பக்கம் என்னமோ நாம பெரிய ஆளு ஆயிட்டதா நினைப்பு. இன்னொரு பக்கம், பள்ளி முடித்து திரும்ப வந்த உடன் பலகாரம் எடுத்து வைக்க அம்மா இருக்க மாட்டங்களே? ஊரு கோபம் எல்லாம் காட்டுவதற்காக சும்மா தங்கையுடன் சண்ட போட முடியாதே.  என்ன தான் திட்டினாலும் ,அதிகாலை எழுப்பி விட்டு, ஹார்லிக்ஸ் குடுத்து, கிரிக்கெட் பாக்க சொல்லும் அப்பா? ஹ்ம்ம்..


பேருந்தில் அம்மா மடி படுத்து தூங்கினேன். "ஞாபகம் இருக்கா? காலேஜ் போற" என்ற அப்பாவை ஒரு முறை முறைத்து விட்டு அம்மா மடியில் நிம்மதியாய் தூங்கினேன். மனதுக்குள் ஆயிரத்தி எட்டு கேள்விகளுடன் சென்ற மறக்கவே முடியாத ரெண்டு மணி நேர பயணம் அது. 


அதன்பின் வார விடுமுறைக்கு நான் காரைக்குடி வரும் போது எல்லாம், திரும்பி போகும் போது அம்மா தான் என் கூட பேருந்து நிலையம்  வரை வருவார்கள்.இது ஒரு உணர்வு பூர்வமான நம்பிக்கை. ஒரு தடவை நான் அப்பாவோட போக, அந்த முறை பேருந்தில் அம்பது ருபாய் நோட்டு ஒன்றை நான் தொலைத்துவிட, "இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன்"னு   அம்மா, அப்பா கூட பெரிய சண்டை போட்டதாக தங்கை அடுத்த வாரம் சொன்னாள். 


எங்கள் வீட்டில் இருந்து ரெண்டு  கி.மீ நடக்க வேண்டும் பேருந்து ஏற. போற வழி ஒன்னும் பச்சை பசேல் விவசாய நிலம் இல்லை. தரிசு நிலம். எல்லாம் பிளாட் போட்டு பத்து வருசமா விக்காம கிடக்குற நிலம். ஒத்தை அடி பாதைல அம்மா கூட கதை அடிச்சுகிட்டே நடந்தா ரெண்டு கி.மீ நடந்ததே தெரியாது. என்ன தான் சனியும் ஞாயிறும் ஊர் கதை எல்லாம் பேசினாலும், அந்த கடைசி நாப்பது  நிமிட நடைல பேசின விஷயங்கள் பல நாட்களுக்கு  மறக்காது. சில நேரங்கள்ல அது அப்பாவையோ தங்கையையோ பற்றிய குறையாய் இருக்கும். சில நேரங்கள அது பக்கத்துக்கு வீட்டு சண்டை பத்தி இருக்கும். அம்மா டி.வில பார்த்த  சினிமா பத்தியோ, கோவில் திருவிழா பற்றியோ இருக்கும். என்ன பேசினோம் என்பதை விட, அந்த தருணங்களை  அம்மாவுடன் கழிப்பதே முக்கியமாய் இருந்தது.  'பேசினோம்' என்று நான் இடுகை முழுக்க சொன்னாலும், அம்மா பேச, நான் வெறும் "ம்" கொட்டிகிட்டே நடப்பேன். 


 "அப்பா திட்டினது எல்லாம் மனசுல வச்சுக்காத", "நல்லா சாப்புடு என்ன", "நல்லா படிக்கணும் தம்பி" , "அப்பாவ விட எனக்கு நீ தான் உசிரு", "அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படினு தப்பான பழக்கம் எல்லாம் பழக கூடாது" சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், அவை எதுவுமே வெறுப்பை தந்தது இல்லை. எதோ நான் விமானம் ஏற போற மாதிரி, பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் எனக்காக ஒரு பெரிய பிரார்த்தனை. . "அடுத்த வாரம் வருவீல?","பஸ்ல நிக்காம உக்கார்ந்து போ",ரூபா பத்திரம். இது போதும்ல? ". "இங்க பஸ் ஏறுனா சீட்டு கெடைக்காது. நீ பெரிய பஸ் ஸ்டான்ட் போய் பஸ் ஏறு. நாலு ரூபா போனா போகுது'..இது ரெண்டு ரூபா குடுக்காம சந்தைக்கு நடக்குற அம்மாவிடம் இருந்து.  


அதுக்கு அப்புறம் நான் வேலை கிடைத்து மங்களூர் போகும் போதும், அம்மா தான் எப்பவுமே பேருந்து நிலையம் வரை கூட வருவாங்க. ஒரு சில தடவ கூட்டமே இல்லாம பேருந்து வந்தாலும் நான் "அடுத்த பஸ்ல போறேன்" அப்படின்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நேரம் பேசுவோம். இப்பொழுது அம்மாவின் அறிவுரைகள் மாறி இருந்தன. "கெட்ட பழக்கங்களை" பற்றி தான் பெரும்பாலவை இருக்கும். இடை இடையே "பத்திரம் தம்பி","கடல் பக்கம் போகாத", "ஆபிஸ்ல சண்ட போடாத" "இவ்ளோ சம்பளம் குடுக்குறாங்களே, அதுக்கு ஏத்த வேல வாங்கு வாங்கலோ?" "சிக்கிரம் தூங்கிரு. என்ன?", "போன்  பண்ண மறந்துறாத"...இன்றும் எதுவுமே மறக்கவில்லை.


அமெரிக்க விமானம் ஏறிய நாள், அம்மா கண்களில் சொல்ல வந்த ஆனா சொல்ல முடியாத பல கவிதைகள்/கனவுகள்/வருத்தமான சந்தோசங்கள்/சந்தோஷமான வருத்தங்கள். அது ஒரு தனி கதை, இன்னொரு நாள் எழுதுறதா இருக்கேன்.


அம்மா சொன்னது மட்டும் ஆயிரம் கதைகள் இல்லை, அம்மா என்ற சொல்லுக்குள்ளும் ஆயிரம் கதைகள் இருகின்றன!!

7 comments:

Anonymous said...

அம்மாவுக்கு காட்டாதீங்க. அழுதுருவாங்க

பாலாஜி said...

"இது ரெண்டு ரூபா குடுக்காம சந்தைக்கு நடக்குற அம்மாவிடம் இருந்து. "

அதுதான் அம்மா

நல்ல பதிவு

நல்ல வரிகள்

thenammailakshmanan said...

உண்மை உண்மை தலைவா எல்லாம்

:)))

ஹுஸைனம்மா said...

தவறாம ஃபோன் பண்ணுவீங்கதானே?

"உழவன்" "Uzhavan" said...

அம்மானா சும்மாவா :-)

செந்தில் நாதன் said...

எல்லாருக்கும்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

@சின்ன அம்மணி: கடிதம் போன உடன தொலைபேசி அதெல்லாம் சரி பன்னிருவோம்ல... :)

@பாலாஜி நன்றி...அது தான் அம்மா.. :)

@தேனம்மை நூறு சதவித உண்மை.. :)

@ஹுஸைனம்மா சனி நிறு நமக்கு என்ன வேல..தொலைபேசில தான்..

@உழவன் நன்றி.. :)

cheena (சீனா) said...

அன்பின் செந்தில்

அம்மான்னா அம்மாதான் - அத விவரிக்க இயலாது - உணர்ச்சிகள் கொட்ட எழுதப்பட்ட இடுகை - நல்வாழ்த்துகள் செந்திமா

நட்புடன் சீனா