மங்களூர்..நான் வாழ்ந்த ஊர்களில் மிகவும் அமைதியான நகரம். சிறு சிறு மத கலவரங்கள் தவிர்த்து பல மொழிகள் (கன்னடம், மலையாளம்,துளு,கொங்கனி,ஹிந்தி) பேசும், பல மதங்களை சேர்ந்தோர் சேர்ந்து வாழும் இடம். என்றேனும் மங்களூர் பற்றி ஒரு பதிவு போடவேணும் என்று எண்ணம் உண்டு.வரைவில் சில குறிப்புகள் குறித்து வைத்திருந்தேன். நான் பார்த்த ஆள் அரவம் அற்ற கடற்கரைகள், எந்நேரமும் பரபரத்துக்கொண்டு ஓடும் உள்ளூர் பேருந்துகள், நேர்மையான ஆட்டோகாரர்கள் (நான் இன்போசிசில் வேலை செய்பவன் என்று தெரியும் வரை!!), பாக்கெட் மணி தினம் ஆயிரம் என்ற அளவில் செலவு செய்யும் கல்லூரி பசங்க/பொண்ணுங்க(துபாய், பாம்பே பணம்), அழகான பெண்கள், அடித்துப் பெய்யும் மழை, நான் பார்த்த பெரிய பாம்புகள் என்று பல குறிப்புகள். இவை எல்லாம் நான் பொத்தி பாதுகாத்த நினைவுகள். என் மூளையின் நெடுங்கால ஞாபக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளவை. நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கப்படாதவை.
ஆனால் இந்த பதிவு மேலே சொன்ன எதை பற்றியும் அல்ல. இது நேற்று (21-மே-2010 ) நடந்த விமான விபத்து பற்றியது. காலை 6:30 மணி. பனி மூட்டம் இல்லை. மழை இல்லை. (லைலா அந்தப்பக்கம் சென்றிருந்தால் விமானம் ரத்து செய்யப்பட்டிருக்குமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை). விமானம் தரை இறங்கும் ஓடுபாதையில் எந்த பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை. இந்த விமானி இதே விமானதளத்தில் இதே விமானத்தை பத்தொன்பது தடவை இறக்கியுள்ளார். சகவிமானி 66 தடவை இறக்கி உள்ளார். எனவே இது ஒன்றும் மிக சாதாரண தொழிநுட்பக் கோளாறாய் தெரியவில்லை.
முதலில் விமானத்தள அமைப்பை பாப்போம்.
நேர்கோட்டில் தெரிவது பழைய ஓடுதளம். 45 டிகிரி கோட்டில் தெரிவது 2006-யில் திறக்கப்பட்ட புது ஓடுதளம். புது ஓடுதளத்தின் நீளம் இரண்டு கிலோமீட்டர். விபத்துக்குள்ளான விமானம் தரை இறங்க இது போதும். இதற்கும் மேல் ஓடுதள முடிவில் மணல் குன்று ஒன்றும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.(மற்ற விமான தளங்களில் உள்ளது போல பெரிய மணல் குன்று இல்லை என்றாலும், சிறிய அளவில் உள்ளது). பின் ஓடுதளத்தில் உள்ள அபாயம் என்ன? ஓடுதளம் ஒரு குன்றின் மேல் உள்ளது. ஆங்கிலத்தில் இதை "Tabletop" என்று சொல்கிறார்கள். எனவே ஒரு சிறு தவறு கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். கம்பியின் மேல் நடப்பது போல. கரணம் தப்பினால் மரணம். எனவே இங்கு புதிதாய் வரும் விமான நிறுவங்களுக்கு இதற்காவே தனியாய் பயிற்சி நடப்பதாய் சொல்கிறார்கள். நன்கு அனுபவம் வாய்ந்த விமானிகளே இங்கு தரை இறக்க அனுமதிக்க படுவதாய் சொல்கிறார்கள். (இந்த சம்பவத்தில் அது உண்மையாய் தான் தெரிகிறது).
விமானி 2000 அடி தள்ளி தரைதொட்டுளார். ஏன்? தெரியவில்லை.
மொத்த 8000 அடி ஓடுதளத்தில், விமானம் இறங்க தேவை 6000-7000 அடிகள்.அவர் 2000 அடிகள் தள்ளி தரை இறங்கியதாலும், வேறு சில(?) காரணங்கள் (விமானம் நேர்கோட்டில் இல்லாமல், வலது பக்கம் சிறிது தள்ளி சென்றுவிட்டதாக ஒரு உறுதிபடுத்தபடாத தகவல்),
காரணமாக, விமானி ஓடுதளத்தில் இருந்து விலகி விமானத்தை செலுத்தி உள்ளார். குன்றின் மேல் ஓடுதளம் உள்ளதால், விமானம் குன்றில் இருந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இப்படி உடனடியாக யார் மேலும் குற்றம் சொல்ல முடியாத நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி கிடைக்கும் வரை எந்த முடிவுக்கும் நாம் வர முடியாது. இது தெரிந்தும் பல ஆங்கில செய்தி தொலைகாட்சிகள் யார் மேலாவது பழியை போட துடித்துக்கொண்டு இருகின்றன. வருத்தமான விஷயம்.
விமானி "Air India"வின் தொழிலாளி இல்லை என்றும், அவர் வெளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்பதாகவும், Contract அடிப்படையில் இந்த விமானத்தை இயக்குவதாகும் சொல்லப்படுகிறது. இதுவும் கூட விபத்துக்கு காரணமாய் இருக்கலாமோ என்று கேள்வி உள்ளது. அவர் தன் மீது குற்றம் வந்து விட கூடாது என்று, அவசரத்தில் விமானத்தை ஓடுபாதையில் இருந்து திருப்பி விட்டதாய் கூறப்படுகிறது!!! எனக்கு இந்த வாதத்தில் நம்பிக்கை இல்லை. அவர் கடைசி நொடிகளில் எடுத்த முடிவுகள் அவர் உயிரையே எடுக்கும் என்று அறிந்து எடுக்கப்பட்டவை. அதில் எப்படி அவர் தவறு செய்து இருக்க முடியும்? பலி ஆடு தேடும் செயல் இது என்றே எண்ணுகிறேன்.
எனவே முடிவுகளுக்கு செல்லாமல் நான் என் கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன்.
விமானத்தில் கடவுள் அருளால் தப்பியவர்கள் விமானத்தின் நடுவில் அமர்ந்தவர்கள் மட்டும் இல்லை. ஏழாம், நாற்பத்தி ஐந்தாம் இருக்கையில் இருந்தவர்கள் தப்பி உள்ளனர். எனவே ஒரு சிலர் தப்பிக்க முடியும் என்றால், மற்றவர்கள் ஏன் முயலவில்லை? முன்னமே தெரிந்திருந்தால் அவர்களை காப்பற்ற வழிகள் உள்ளனவா? விமானி பயணிகளுக்கும் தகவல் மையத்திற்கும் தன் நிலை பற்றி முன்னரே விளக்கினாரா?
போயிங் ஏற் இந்தியாவிற்கு அளித்த விமானங்களில் ஏதேனும் கோளாறு இருக்க வாய்ப்புண்டா? இந்த நிறுவங்களை நான் என்றுமே நம்பியதில்லை. நாம் எல்லாம் இரெண்டாம் தர மக்கள் இவர்களுக்கு. போயிங் இந்த விசாரணையில் உதவி அளிப்பதாய் வாக்களித்து உள்ளது. ஆனால் அவர்களும் குற்றம் செய்து இருக்க வாய்ப்புள்ளது என்பதை விசாரணை செய்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஓடுபாதையில் ஏதேனும் சிதைவு இருக்க வாய்ப்புண்டா?
ஆங்கில தொலைகாட்சிகள் பலி ஆடு தேடிக்கொண்டு இருக்க, ஒரு கன்னட தொலைக்காட்சியில் சிறப்பான அலசல் பார்த்தேன். கன்னடம் புரியாவிடினும் இந்த விடியோவை பாருங்கள். புரியும்.
பதில்கள் கிடைக்கும் வரை இந்த ஓடுபாதை மூடப்பட வேண்டும். இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் பரவாயில்லை. மனித உயிர் அனைத்தையும் விட மதிப்பானது.
இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் என் வருத்தங்கள். எங்கள் பிரார்த்தனைகளில் நீங்கள் உள்ளீர்கள்.
11 comments:
நல்ல அலசல். உண்மையான காரணங்களை பொதுவில் வைத்தாலே இமாதிரி துயரங்களை வருங்காலத்தில் தவிர்க்க முடியும்.
மற்றவர்கள் ஏன் தப்பிக்க முயலவில்லை? இந்த கேள்வி எனக்கும் எழுந்தது. :(
இறந்த உயிர்கள் அமைதியடையட்டும்...
உண்மைகள் வெளிவரட்டும்...
நல்ல அலசல்...
எனக்கு தெரிந்ததில் இருந்து
விமானங்கள் ஓடுபாதையை விட்டு வெளியில் ஓடுவது ஒன்றும் புதிதல்லவே
ஒன்று விமானியின் சிறு கவனக்குறைவு (தாமதமாக தரையிறக்குதல்) அல்லது ஏதோ காரணத்திற்காக (ஓடுபாதை வழுக்கினால்) விமானம் ஓடுபாதையை விட்டு வெளியில் வருவது அவ்வப்போது நடப்பது தான்
பெறும்பாலான விமான நிலையங்களில் ஆனால் அப்படி வெளியில் வந்தால் அந்த விமானம் ஒரு சாலையில் செல்லும் வாகனங்களிலோ அல்லது சில கட்டிடங்களிலோ இடித்து நிற்கும்
இது பல விமான நிலையங்களிலும், பல இடங்களிலும் நடப்பது தான்
--
மங்களுரில் அப்படி ஓடுபாதையை விட்டு வெளியில் வந்தால் சுமார் 60 அடி பள்ளத்தாக்கினுள் விழ வேண்டியுள்ளது
கப்பலில் விமானத்தை இறக்கி ஏற்றுவது போன்ற நிலை இது
பொதுவாக சிவிலியன் விமான நிலையங்கள் இப்படி அமைக்கப்படுவதில்லை என்கிறார்கள்
--
உதாரணம் வேண்டுமென்றால் தரையில் தூங்குகிறீர்கள். தூக்கத்தில் புரண்டால் நீங்கள் சுவற்றில் இடிப்பீர்கள் அல்லது பக்கத்தில் இருப்பவர் மேல்
ஒரு 15 அடி உயர மேசையில் தூங்கி, சிறிது புரண்டு படுத்தால் என்ன நடக்கும்
--
இங்கு இந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அதள பாதாளத்தில் விழுந்துள்ளது
விமான ஓடுபாதை altitude 90m (அதாவது கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் ஓடுபாதை இருக்கிறது)
அந்த கூகிள் மேப்பில் நீங்கள் மேலும் சிறிது தென்கிழக்குகாக பாருங்கள் - கொங்கன் ரயில்வே டிராக் தெரியும். அந்த இருப்பு பாதை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 17 மிட்டர் உயரத்தில்
அதற்கு மேலும் தென்கிழக்கில் பள்ளத்தாக்கு உயரம் 7 மீட்டர் அதாவது சுமார் 30 அடி
விமானம் விழுந்தது அங்கு தான் (தொலைக்காட்சியில் தெரியும் தொடர்வண்டி இருப்பு பாதை அது தானே)
ஆக ஓடு பாதையை விட்டு வெளியேறிய விமானம் சுமார் 250 அடி (குறைந்த பட்சம்) ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளது.
பொதுவாக சிவிலியன் விமான நிலையங்கள் இப்படி அமைக்கப்படுவதில்லை என்கிறார்கள்
ரானுவ விமான நிலையங்கள் (சிறிய விமானங்கள்) வேண்டுமானால் இப்படி அமைப்பார்களாம்.
சரி
விமான நிலையம் அமையும் முன்னர் யாரும் இதை சுட்டிக்காட்ட வில்லையா
இந்த சுட்டியை படித்து பாருங்கள் வயிறு எரிகிறதா
விளக்கத்திற்கும், சுட்டிக்கும் நன்றிங்க ப்ரூனோ.
ச்சே.. என்ன கொடுமைங்க இது? ஒரு எதிர்ப்பிற்கான காரணத்தினை சரியாக ஆராயாமல் அரசாங்கமும் , நீதித்துறையும், புண்ணாக்கு வியாக்கியானங்களும்..
இன்னும் செய்தித்தாள்களில் பரபரப்பினை மட்டுமே போட்டோக்களுடன் எழுதிகொண்டிருக்கிறார்கள்.
வயிறு மட்டுமா எறிகிறது?.
இனியாவது இம்மாதிரி கவனக் குறைவுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்,
இந்திய அரசியலில் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக்குறைவே ...
செந்தில் நாதனுக்கும், புருனோவுக்கும் நன்றி ....
மிகவும் நன்றாக விளக்கியிருக்கிறார்.
சுட்டிக்கு நன்றி.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வழக்கமான blame games தொடங்கிவிடும். வழக்கம்போல சிலநாட்களில், அடுத்த பரபரப்பு வரும்போது இதுவும் மறக்கப்படும்.
வழகம்போல நாம் எப்போதும் இறைவனை மட்டும் நம்பி, பிரயாணங்களைத் தொடர்வோம்.
//இந்த சுட்டியை படித்து பாருங்கள் வயிறு எரிகிறதா
//
புருனோ,
இந்த சுட்டி சொல்வது எல்லாம் இன்று உண்மையாக கவலை அளிப்பவையாக தோன்றினாலும், பல நாடுகளில் இதே மாதிரி "TableTop" ஓடுதளங்கள் உள்ளன. எனவே என்னை பொறுத்த வரை இது அடிப்படை பிரச்சனையாக தெரியவில்லை. நாம் இங்கு தொழில்நுட்பத்திலும் பின்தங்கி இருப்பதாய் தெரியவில்லை. நான் பதிவில் சொன்னது போல, கருப்பு பெட்டி வரும் வரை, நாம் யுகிக்கலாமே தவிர, தீர்மானமாய் பதில் சொல்ல முடியாது.
ஷங்கர், கன்கொன், செந்தில், ராஜா, ஹுச்சைனம்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//பல நாடுகளில் இதே மாதிரி "TableTop" ஓடுதளங்கள் உள்ளன. //
போயிங் ஏர்பஸ் போன்ற விமானங்களுக்கா அல்லது சிறிய விமானங்களுக்கா
--
ரொம்பக் கொடுமை இது செந்தில்
Post a Comment